Tuesday, 24 May 2011

தியாகதீபம் வைகோ




எந்தக் கட்சியும் எந்தத் தலைவரும் ஒரு போதும் அறிவிக்காத ஒரு பிரும்மாண்டமான இலவசம் வாக்காளர்களான நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் இலவசக் கதிர்வீச்சு. அதற்கு ஆணவம் மிகுந்த ஜெயலலிதாவா சூழ்ச்சிக்காரக் கருணாநிதியா அப்பாவியான வாக்காளர்களா என்றெல்லாம் பாரபட்சமே கிடையாது. எல்லாரையும் அழித்துவிடும்.
தமிழ்நாட்டை அழிக்க வடக்கே கல்பாக்கத்திலும் தெற்கே கூடன்குளத்திலும் அமைந்துள்ள அணு உலைகளே போதுமானவை.
பெரும் விபத்துக்குள்ளான அணு உலையிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோக்கியோவில் கதிரியக்க அளவு 20 மடங்கு அதிகமாகிவிட்டது. சென்னைக்கும் கல்பாக்கத்துக்கும் இடையில் வெறும் 80 கிலோமீட்டர்தான். சென்னையில் சுனாமி வந்தபோது கல்பாக்கம் உலையும் பாதிக்கப்பட்டது. பெரிய பாதிப்பு இல்லாததால் தப்பித்துக் கொண்டோம். ஜப்பான் உலைக்கு நேர்ந்தது போல இங்கே நேர்ந்தால் இப்போது இதை எழுத நானும் படிக்க நீங்களும் இருக்க மாட்டோம்.
உடனடியாக சில லட்சம் பேரும் மெல்ல மெல்ல புற்று நோயில் மேலும் பல லட்சம் பேரும் அழிவது இவற்றில் விபத்து ஏற்பட்டால் நிச்சயம். அணு உலையில் பெரும் விபத்து ஏற்பட்டால் அது பல தலைமுறைகளுக்கு நிலம், நீர், காற்று, மனிதர்களை நாசமாக்குகிறது. அணுக்கழிவுகளிலிருந்து கதிரியக்கம் ஏற்படாமலும் பரவாமலும் கட்டுப்படுத்தி வைக்க போதுமான தொழில்நுட்பம் உலகில் எங்கேயும் இன்னமும் நூறு சத விகித உத்தரவாதத்துடன் உருவாக்கப்படவே இல்லை. விபத்து ஏற்படாது என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது. ஏற்பட்டால் தீர்வுகள், நிவாரணங்கள் சாத்தியமும் இல்லை.
ஓர் எழுத்தாளனுக்கு மிகுந்த அலுப்பு தருவது ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருப்பதுதான். மின்சாரம் தயாரிக்க அணு உலைகளை விட்டால் இனி வேறு வழி கிடையாது என்ற விதண்டாவாதம் செய்பவர்கள் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐம்பதுக்கு மேற்பட்ட அணு உலைகளை வைத்திருந்தும் ஜப்பானின் மொத்த மின்சாரத்தில் அது வெறும் 30 சதவிகிதம்தான். இந்தியாவில் இப்போது சூர்ய சக்தி, காற்றாலை போன்ற ஆபத்தற்ற மின் தயாரிப்பு முறைகளுக்கு அரசு வெறும் 600 கோடி ரூபாய்தான் செலவிடுகிறது. ஆனால் அவை 5 சதவிகிதம் மின்சாரத்தை தருகின்றன. அணுசக்திக்கோ 3897 கோடி ரூபாய் ஒதுக்கி வெறும் 3 சதவிகித மின்சாரம்தான் கிடைக்கிறது.
நில நடுக்கம், சுனாமி போன்றவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உலகிலேயே மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்துவைத்திருக்கும் நாடு ஜப்பான். அங்கே நேர்மையும் ஒழுக்கமும் நம்மை விடப் பல மடங்கு அதிகம். அதனால்தான் நம் சுனாமியைப் போல பல மடங்கு பெரிய அழிவு அங்கே ஏற்பட்டும்கூட ஒப்பீட்டளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் நமது விகிதங்களில் அங்கே இல்லை. அழிவு ஏற்பட்ட எந்த ஊரிலும் ஒரு சிறு கடை கூட சூறையாடப்படவில்லை.கடும் பஞ்சத்துக்கு நடுவிலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒழுங்காக கியூவில் நின்று கிடைத்ததை வாங்கிக் கொள்கிறார்கள்.
பள்ளிக்கூடத்திலேயே நில நடுக்கத் தற்காப்பு பயிற்சிகள், ஒத்திகைகள் மாதந்தோறும் குழந்தைகளுக்குத் தரப்படுகின்றன. அணு உலை விபத்து ஏற்பட்டதும் அருகிலிருக்கும் லட்சக்கணக்கானவர்களை இன்னொரு பகுதிக்கு ஒரே நாளில் குடி பெயரச் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது. அதுவே போதாதது என்று அங்கே விமர்சிக்கப்படுகிறது. நம்மால் கூவம் கரை குடிசைவாசிகளுக்கு மாற்று இடம் தருவதைக் கூட ஒழுங்காகச் செய்ய முடிவதில்லை. இலவச வேட்டி சேலை கொடுக்கும் இடத்தில் நெரிசல் தள்ளுமுள்ளுவில் சாகத் தயாராக இருக்கும் சமூகம் நம்முடையது. தலைவர் செத்தால், கடைகளை சூறையாடுவது நம் மரபு. தீர்வுள்ள சாயப்பட்டறைக் கழிவையே தீர்க்காமல் ஊரையும் ஆற்றையும் விவ்சாயத்தையும் நாசமாக்கியிருக்கிறோம்.
கல்பாக்கத்தில் விபத்து ஏற்பட்டால் அருகே உள்ள பகுதி மக்களை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு அழைத்துச் செல்வது பற்றிய ஒத்திகை சில வருடங்கள் முன்பு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டது. எந்த லட்சணத்தில் தெரியுமா? அழைத்து செல்ல வேண்டிய பஸ்கள் பிரேக் டவுன் ஆகிவிட்டன. காவல் அதிகாரிகளின் வயர்லெஸ் கருவிகள் வேலை செய்யவில்லை.
இந்திய அணு உலைகளில் முழு நேரத் தொழிலாளர்களும் அன்றாடக் கூலிகளும் கடுமையான கதிரிவீச்சுக்கு உட்படுத்தப்படுகின்றனர். எந்த அளவுக்கு கதிர் வீச்சு என்பதை முறையாக ஊழியர்களுக்குத் தெரியப்படுத்துவதில்லை. விபத்துகளில் தினக் கூலிகள் செத்திருக்கிறார்கள் கல்பாக்கத்தில் உள்ளே நடந்த பல கதிர் வீச்சு விபத்துகள் பற்றி அங்குள்ள தொழிற்சங்கம் பட்டியலிட்டு நிர்வாகத்திடம் பல வருடங்கள் முன்பே கொடுத்திருக்கிறது. ஆனால் எதற்கும் முறையான பதில்கள் இல்லை.
நம் அணு உலைகள் பலவும் அணுகுண்டு தயாரிக்கும் இடங்கள் என்பதால், அரசு அவற்றை ராணுவ இடங்களாகக் கருதி எல்லாவற்றையும் ரகசியமாக வைத்துக் கொள்கிறது. வேலை பார்ப்பவர்களுக்கும் சரி, பொது மக்களுக்கும் சரி எதையும் கேட்டு தெரிந்துகொள்ளும் உரிமை இல்லை. குற்றவாளியே நீதிபதியாக இருப்பது போல தவறுகளுக்குப் பொறுப்பான அரசாங்கமே எல்லாம் சரியாக இருப்பதாக முடிவையும் அறிவித்துவிடுகிறது.
அணு உலை வியாபாரத்தில் இருக்கும் அரசுகளும் சரி, தனியாரும் சரி தொடர்ந்து முழு உண்மைகளை சொல்லாமல் அரை உண்மைகளையும் முழுப்பொய்களையும்தான் சொல்லி வந்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றில் நிறைய சம்பவங்கள் உள்ளன. ஜப்பானில் அணு உலை நடத்தும் ஒரு தனியர் கம்பெனியான டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் கம்பெனிக்கு அதற்கான கருவிகள் அனைத்தையும் அமெரிக்க ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனி விற்றது. அப்படி விற்றபோது அந்தக் கருவிகளின் தொழில்நுட்ப சிக்கல்கள் பற்றி முழுமையான தகவல்களை ஜெனரல் எலெக்ட்ரிக் தரவில்லை என்று அதில் வேலை பார்த்த சுகோகா என்ற ஜப்பானியர் அம்பலப்படுத்தினார். அவருக்கு வேலை போயிற்று. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்களை ஜெனரல் எலெக்ட்ரிக், டோக்கியோ கம்பெனி இருவருமாக அரசின் அணு உலைக் கண்காணிப்பாளர்களிடமிருந்து மறைத்தார்கள் என்று பின்னர் தெரியவந்தது.
இந்தியாவில் அமெரிக்கத் தனியார் கம்பெனிகள் அணு உலை விற்பதற்கு வழி செய்யும் ஒப்பந்தத்தைத்தான் மன்மோகன்சிங் இடது சாரிகள், பி.ஜே.பி ஆகியோரின் எதிர்ப்பை மீறி அமெரிக்காவுடன் செய்தார். அப்போது ஆட்சி கவிழாமல் இருப்பதற்கு எம்.பிகள் விலை கொடுத்து வாங்கப்பட்டார்கள் என்பது இப்போது விக்கிலீக்ஸ் அமபலப்படுத்தியிருக்கும் அமெரிக்க தூதர்களின் ரகசியச் செய்திகளால் நிரூபணமாகியிருக்கிறது.
ஊழலும் லஞ்சமும் ஒழுக்கக் கேடும் மலிந்து கிடக்கும் இந்தியச் சூழலில், எந்த அமைச்சருக்கு எந்த இலாகா, எந்த இலாகாவுக்கு யார் அமைச்சர் என்பதை தொழிலதிபர்களின் தரகர்கள் தீர்மானிக்கும் கேடு கெட்ட அரசியலில், மனித குலத்தாலேயே இதுவரை தீர்வு காணப்படாத ஆபத்தான அணு தொழில் நுட்பத்தை அமலாக்குவது மிக மிக ஆபத்தானது.
அணு உலைகளின் பாதுகாப்பை மறு பரிசீலனை செய்வோம் என்று மன்மோகன்சிங் அறிவித்திருப்பது போதாது. அந்த மறு பரிசீலனை நடவடிக்கையில் தன்னார்வக் குழுக்கள் முதல் உச்ச நீதி மன்றம் போன்ற அமைப்புகள் நியமிக்கும் சுயேச்சையான அறிஞர்கள் பங்கு பெறச் செய்ய வேண்டும். புதிதாக எந்த அணு உலையும் தேவையில்லை என்ற முடிவை எடுக்க வேண்டும். மூன்று சத தயாரிப்பில் இருக்கும் போதே முடிவெடுப்பது அவசியம். அணு உலைக்கு இறைக்கும் கோடிக்கணக்கான பணத்தை மாற்று முயற்சிகளுக்கு ஒதுக்க வேண்டும்.
வீட்டுக்கு வீடு இலவச டி.வி.பெட்டி, கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் கிடைத்தால் போதும் என்று ஏங்கிக் கிடக்கும் முட்டாள்களாகிய நாம், சொல்லாமல் கொள்ளாமல் வரவிருக்கும் இலவசமான கதிர் வீச்சு பற்றி இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால் பேரழிவுக்கு வழி வகுப்பது உறுதி. இன்னும் பிறக்காத கொள்ளுப் பேரன்களுக்கெல்லாம் இப்போதே சொத்து சேர்க்கும் தமிழின தலைவர்கலும் உடன்பிறப்புகளும் உடன்பிறவாத கொள்ளைக் கூட்டாளிகளும் ஒன்றை மறக்க வேண்டாம். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை ஒரே ஒரு பேரக் குழந்தைக்கு உருவாக்கி வைத்தாலும், அந்தப் பேரக் குழந்தையும், ஒற்றை தம்படி கூட இல்லாத தெருவோரக் குழந்தையும் கதிர் வீச்சுக்கு முன்னால் சமமாகவே நடத்தப்படுவார்கள்.
இந்தியாவின் எல்லா அணு உலை திட்டங்களையும் உடனடியாக நிறுத்திவைக்கவேண்டும், இருக்கும் அணு உலைகள் பற்றிய பகிரங்கமான விசாரணைகள் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை நாம் எல்லாரும் எழுப்பியாக வேண்டும்

No comments:

Post a Comment