Tuesday, 24 May 2011

Ungalaal Mudiyum VAIKO - கவலைகள்







ஒளிவு மறைவற்ற பகிரங்கமான நிர்வாகம் அமையாமல் நம்முடைய எந்தப் பிரச்சினைக்கும் நம்மால் தீர்வு காணவே முடியாது.
என்ன நடக்கிறது என்பதை முழுக்க முழுக்க மூடி மறைக்கும் அரசுத் துறைகளில் முதல் இடத்தில் இருப்பது நம்முடைய அணுசக்தித் துறைதான்.
இந்தியா இதுவரை தன் அணு உலைகளை சர்வதேச அணு உலைக் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வுக்கு உட்படுத்த மறுத்தே வந்திருக்கிறது. அதற்குக் காரணம், ரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருந்ததுதான். இரண்டாம் பொக்ரான் குண்டு வெடிப்பில் பகிரங்கமாக நாங்களும் அணு குண்டர்கள்தான் என்று அறிவித்தபிறகு, அணு ஆயுத தயாரிப்பை தனியாகவும் அணுமின்சாரத் தயாரிப்பைத் தனியாகவும் பிரிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. காரணம் அணு மின்சாரத் தயாரிப்பில் அமெரிக்கா, ரஷ்யா முதலிய நாடுகளின் கம்பெனிகளிடமிருந்து உலைகளை வாங்கவும் இங்கே அதில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கவும் மன்மோகன் அரசு முடிவு செய்ததுதான்.
அப்படி முடிவு செய்ததும் அணுமின்சார உலைகளை சர்வதேச கண்காணிப்புக்கு உடபடுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே 2000மாவது ஆண்டில், இந்திய அரசு அதுவரை தன்னுடைய அணு சக்தித்துறையைக் கண்காணிப்பதற்காக தானே ஏற்படுத்தி வைத்திருந்த கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பிலிருந்து அணு ஆயுத தயாரிப்பு ஆலைகளை நீக்கி உத்தரவிடுகிறது. இனி அவற்றைக் கண்காணிக்க தனியே உள் அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கிறது.
வாரியத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் இது தொடர்பாக அண்மையில் தெரிவித்திருக்கும் தகவல்கள் மிகவும் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. அணு ஆயுத ஆலைகளை வாரியக் கண்காணிப்பிலிருந்து பிரித்தபின்னர், என்ன உள் கண்காணிப்பு முறை ஏற்படுத்தப்பட்டதென்று தெரியவில்லை என்கிறார். பதினோரு வருடங்களாக அணு ஆயுத ஆலைகளின் பாதுகாப்பு நிலை பற்றி தன் வாரியத்துக்கு எதுவும் தெரியாது என்கிறார்.
இந்தியாவில் அணு ஆயுத தயாரிப்பு ஆராய்ச்சி ஆலைகள் பல இடத்தில் உள்ளன. பெரும் மக்கள் தொகை இருக்கும் மும்பைக்கும் சென்னைக்கும் அருகே அணு ஆயுத தயாரிப்பு ஆலைகள் உள்ளன. சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில்தான் அணுகுண்டுக்கு தேவையான புளுட்டோனியத்தைப் பிரித்து எடுக்கும் ஆலையும் அணு நீர்மூழ்கிக் கப்பல் ஆய்வு ஆலையும் உள்ளன.
இவற்றை நடத்துபவர்களே கண்காணிப்பவர்களாகவும் இருப்பது எப்படி நியாயம் என்ற கேள்வியை கோபாலகிருஷ்ணன் எழுப்பியிருக்கிறார். சுயேச்சையான மேற்பார்வை அமைப்பு இல்லாதவரைக்கும் பாதுகாப்பு ஒழுங்காகத்தான் இருக்கிறதா என்பது உறுதிப்படுத்தமுடியாததாகவே இருக்கும்.
அமெரிக்காவில் இது இப்படி இல்லை என்று கோபாலகிருஷ்ணன் சுட்டிக் காட்டியிருக்கிறார். 1988ல் அங்கே இதற்கென்றே உருவாக்கப்பட்ட கண்காணிப்பு வாரியத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி செனட்டின் ஒப்புதலுடன் ஐந்து உறுப்பினர்களை, அரசு நிர்வாகத்துக்கு வெளியிலிருந்து பொது மக்களிலிருந்து நியமிக்க வேண்டும். ஐவரில் மூவருக்கு மேல் ஒரே அரசியல் சார்புடையவர்களாக இருக்கக்கூடாது. அவர்கள் அணுத் துறை அறிஞர்களாக இருக்க வேண்டும்.
அணுத்துறையின் ஏதேனும் ஒரு செயல்பாடு பொதுமக்களின் உடல் நலம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இந்த வாரியம் கருதினாலும அது தொடர்பாகக் கோரும் தகவல்களை எல்லாம் அணுத்துறை செயலாளர் கொடுத்தே ஆகவேண்டும். அவை ரகசிய தகவல்களாக இருந்தாலும் கூட ! இவற்றை பரிசீலித்தபிறகு வாரியம் தெரிவிக்கும் பரிந்துரைகளைப் பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். அதன் மீது அணுத் துறை செயலாளர் சொல்லும் கருத்துகளையும் பொதுமக்கள் மும்பு வைக்க வேண்டும். பொது மக்கள் கருத்து தெரிவிக்க 45 நாட்கள் அவகாசம் தரவேண்டும். அதன் பின்னர் வாரியம் மீண்டும் எல்லாவற்றையும் பரிசீலிக்கும்.
இந்தியாவில் இது போல ஒப்புக்கு கூட எதுவும் கிடையாது. அஃபிஷியல் சீக்ரெட்ஸ் ஆக்ட் எனப்படும் அதிகாரப்பூர்வமான ரகசியங்கள் சட்டத்தின் கீழ் அணு உலைகள் பற்றி எந்தத் தகவலையும் ஒரு குடிமகனும் தெரிந்துகொள்ள முடியாது.
தனியார்வசம் அணு மின்சாரம் தயாரிப்பது ஒப்படைக்கப்படுவதற்கு மன்மோகன் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் உடனடியாக அணுத் துரை முழுவதும் பகிரங்கக் கண்காணிப்பின் கீழ் வருவது அவசியமாகிறது.
ஜப்பான் அணு உலை விபத்துக்குப் பின் இந்தியாவில் அணு உலைஉ பாதுகாப்பு இன்னும் கடுமையாக்கப்படும் என்று ஒப்புக்கு மன்மோகன்சிங் அறிவித்ததுடன் சரி. எப்படி கடுமையாகும், யார் அதை பொறுப்பேற்று செய்வார்கள் என்பது பற்றியெல்லாம் எந்த விவரமும் இல்லை. கோபாலகிருஷ்ணன் சொல்வது போல, தவறு செய்யக்கூடிய அதே அணு உலை நிர்வாகமே கண்காணிக்கும் அதிகாரத்துடனும் இருக்கும் அவலநிலைதான்.
சுயேச்சையான ஓர் அணு சக்தி அறிஞர் குழுவை நாடாளுமன்ற சர்வகட்சி ஒப்புதலுடன் நியமித்து அதன் அறிக்கை வரும்வரை புதிய அணு உலைகள் தொடங்கமாட்டோம் என்று அறிவிப்பதுதான் நியாயம். ஆனால் மராட்டியத்தில் ஜெய்தாபூரில் அணு உலை தொடங்குவதை எதிர்க்கும் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஒருவரைக் கொன்றதுதான் இந்த வாரம் மன்மோகன் அரசு எடுத்த நடவடிக்கை.
மொத்த மின்சார தேவையில் வெறும் மூன்று சதவிகிதம் மட்டுமே தரும் அணு உலைகளை நிறுத்திவைத்து ஆய்வு செய்வதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது. திட்டமிட்டபடி புது உலைகள் தொடங்கினாலும் மொத்த மின் உற்பத்தியில் அவை வெறும் ஐந்து சதவிகிதத்தை அடைவதற்கே ஐம்பது வருடங்கள் ஆகும். ஆனால் அந்த உலைகளில் விபத்து ஏற்பட்டால் விளைவுகள் பல தலைமுறைகளுக்கு நம்மை பாதித்துவிடும்.
தன் மொத்த மின் உற்பத்தியில் 25 சதவிகிதத்தை அணு உலைகளிலிருந்து தயாரித்து வரும் ஜெர்மனி இப்போது எல்லா அணு உலைகளையும் படிப்படியாக மூடிவிட முடிவு செய்திருக்கிறது. இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் ஒரே கருத்தில் இருக்கின்றன. ஜப்பான் விபத்துக்குப் பின் ஜெர்மனி தன் மொத்த 17 உலைகளில் எட்டை 90 நாட்களுக்கு மூடிவைத்து ஆய்வு செய்து வருகிறது. மக்களிடையே கருத்து கணிப்பு எடுத்ததில் மொத்த 17 உலைகளையும் மூடிவிடலாம் என்று ஆதரவு தெரிவித்தவர்கள் 76 சதவிகிதம் பேர். இங்கே மக்களிடம் இதற்கெல்லாம் கருத்தே கேட்பதில்லை. கருத்து சொல்ல வருபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை விட, இந்திய அணு உலைகளை ஆய்வுக்குட்படுத்த சுயேச்சையான ஒரு லோக்பாலை உருவாக்குவதுதான் என்னைப் பொறுத்த வரையில் இன்னும் அவசரமான பிரச்சினை. ஏனென்றால் உயிரோடு இருந்தால்தான் லஞ்சம் கொடுப்பது வாங்குவது அதை விசாரிப்பது பற்றியெல்லாம் பேசமுடியும்.
படித்த இளைஞர்கள் பலர் லஞ்சம் பற்றிக் கவலைப்படுகிறார்கள். நேர்மையான, திறமையான நிர்வாகம் வேண்டுமென்பதற்கான அக்கறையோடு இருக்கிறார்கள். அதனால்தான் எதற்காக அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற விவரம் கூடத் தெரியாமல் பல இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவர் பின்னால் குவிந்தார்கள். இதை நீங்கள் அலட்சியப்படுத்தலாமா என்று சில வாசகர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.
இல்லை. இந்த உணர்வுகளால் உந்தப்படுவதை நான் அலட்சியப்படுத்தவில்லை. ஆனால் வெறும் உணர்ச்சி போதாது. கூடவே அறிவு வேண்டும் என்பதுதான் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் விஷயம். ஊழல் ஒழியவேண்டும் என்பது உணர்ச்சி. அதற்கு லோக்பால் மசோதா போதுமானதா, இருக்கும் சட்டங்கள் ஏன் செயல்படுத்தப்படுவதில்லை என்று ஆராய்வது அறிவு. அறிவின் அடிப்படையில்தான் தீர்வுகளை அடையமுடியும்.
பள்ளிப் பருவத்தில் மாணவர்களுக்கு பெரும்பாலும் பாடப்ப் புத்தகத்துக்கு வெளியே படிக்கும் பழக்கம் இல்லை. முதலில் அதை உருவாக்க வேண்டியிருக்கிறது. அது எளிதில் ஒரு நாளில் உருவாக்கக்கூடியது அல்ல. குடும்பம், பள்ளி, கல்லூரி, நண்பர்கள் என்று பலரின் செல்வாக்கில் வளரக்கூடியது அல்லது கருகக்கூடியது. படிக்கும் பழக்கம் பலருக்கு எட்டாம் வகுப்பில் தொடங்கினாலும், அவர்களுக்கேற்ற பல துறைப் புத்தகங்களெழுத தமிழில் மிக சிலரே இருக்கிறார்கள். அவர்களில் பலர் மேம்போக்காக எழுதுகிறார்கள். எளிமையாக, ஆழமாக எழுதுபவர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள்.
எனவே சிறுவர்களிடம் இப்போதைக்கு உரையாடல் மூலம்தான் பல விஷயங்களைப் பகிர வேண்டியிருக்கிறது. 1975-76 எமர்ஜென்சி, தலித் இயக்கங்கள், காந்திய இயக்கம், பொதுவுடமை இயக்கம், திராவிட இயக்கம், சுற்றுச் சூழல், சுதேசி இயக்கம், மகளிர் இயக்கம், இசை, ஓவியம், நாடகம், பாட்டு, கவிதை, அறிவியல், வேளாண்மை, தன் உடற்கூறு ஆரோக்கியம், என்று ஏராளமான விஷயங்களைப் பற்றி அரைகுறையாகக் கூட தெரியாமலேதான் பெரும்பாலோர் வளர்கிறார்கள். தெரிந்திருக்கும் சினிமா, டெலிவிஷன் பற்றிக் கூட முழுமையாக தெரியாது.
பல துறைகளிலும் அனுபவமும் அறிவும் உள்ள மூத்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் அதில் பெரும்பாலோருக்கு, ப்ளஸ் ஒன் படிக்கும் 15,16 வயதினருக்குப் புரியும் விதத்திலும் சுவையாகவும் தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லத் தெரியவில்லை. ஒரு சப்ஜெக்டில் 40 மாணவர்களுக்கு ஒரு பயிற்றுநர் வீதம் குறைந்தது ஐந்து பேராவது தேவை. ஆனால் ஒவ்வொன்றிலும் ஒருவர் கிடைப்பதற்கே ஒவ்வோராண்டும் நானும் துளசிதாசனும் அல்லாட வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு அமர்விலும் சிறப்பாக தங்களுடன் விஷயங்களைப் பகிர்வோரிடம் மாணவர்கள் உற்சாகமாக விவாதிப்பதைப் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம், தரமான, திறமையான, பயிற்றுநர்களுக்கு இருக்கும் பஞ்சம் பெரும் கவலை தருகிறது.
ஒரு பெரும் எண்ணிக்கையில் இளம் தலைமுறை காத்துக் கிடக்கிறது. அதனிடம் தன் அறிவையும் அனுபவத்தையும் பார்வையையும் பகிர்வதற்கு தன்னைத் தயாரித்துக் கொண்ட மூத்த தலைமுறையைக் காணோம். உணவுப் பஞ்சத்துக்கு நிகரான பெரும் பஞ்சம் இது.

No comments:

Post a Comment