இந்தியாவில் உள்ள 20 அணு உலைகளின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு விஷயத்தில் உண்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், சாம்பலில் இருந்து உயிர் பெற்று எழுந்திடும் ஸ்பீனிக்ஸ் பறவையைப் போல, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுத் தாக்குதலில் இருந்து உயிர்த்து எழுந்த ஜப்பான், உலக வல்லரசுகளுக்குச் சவால் விடுகின்ற வகையில், நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குத் தாயகமாக விளங்கி வருகிறது. அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்த ஜப்பானிய மக்களின் வாழ்வில், கடந்த 11.3.2011 கருப்பு தினமாக மாறி விட்டது.
தொடர் பூகம்பம், எரிமலைச் சீற்றம், ஆழிப் பேரலை என இயற்கை சீற்றமும், அதனைத் தொடர்ந்து அணுஉலை வெடித்துச் சிதறி செயற்கைப் பேராபத்தும் ஜப்பானை முற்றுகை இட்டன. பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். லட்சக்கணக்கானோர், உயிர்களையும், உடமைகளையும் இழந்து, வெட்ட வெளியில் கடும் குளிரில் வாடி வதங்கிக் கொண்டு இருக்கின்றனர்.
நவீன விஞ்ஞான உலகில் எட்டிப் பிடிக்க முடியாத சிகரத்தில் இருந்த ஜப்பானுக்கே இந்த நிலை என்றால், இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு என்ன? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனெனில், இந்தியாவும் சுனாமித் தாக்குதலுக்கு உள்ளாகி, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து இருக்கிறது. எதிர்காலத்திலும், அத்தகைய ஆபத்து நிலவுகிறது.
எனவே, இந்தியாவில் உள்ள 20 அணு உலைகள் தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணு உலைககளின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான அணு உலைகள் என்றால், அவ்வப்போது அணு உலை நிர்வாகமும், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறை உயர் அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர், அபாயச்சங்கு ஒலிக்கச் செய்து மக்கள் பொதுமக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி ஓடித் தப்பிக்க பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி அளிப்பதன் மர்மம் என்ன?
எனவே, பாதுகாப்பு விஷயத்தில் உண்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அணு உலைகளுக்கு மாற்று சக்திகளைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்
No comments:
Post a Comment